ஆன்மீகம்

அத்தி பூத்தாற்போல அருள் பாலிக்க வந்தார் அத்தி வரதர்

அத்திகிரி என்பது காஞ்சீபுரத்தில் தெற்கே அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலை குறிக்கும். இந்த கோவிலில் ஐராவதம் யானையே மலைவடிவம் கொண்டு நாராயணனை தாங்கி நிற்பதால், அத்திகிரி என்று அழைக்கப்படுகிறது. கோவில் தீர்த்தங்களாக வேகவதி ஆறு, அனந்தசரஸ் குளம் ஆகியவை இருக்கின்றன.

இந்த கோவிலில் மிகச் சிறந்த நிகழ்வாக கருதப்படுவது, அங்குள்ள அனந்தசரஸ் திருக்குளத்தின் உள்ளே இருக்கும் ஆதி அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நாள் தான். அத்தி பூத்தாற்போல வரும் அந்த நல்ல நாளும் ஆன்மிக அன்பர்களுக்கு இப்போது கைகூடி இருக்கிறது.

காஞ்சி மண்ணில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர் களால், ஆன்மிக அன்பர்களால் விண் அதிர ஒலிக்கப்பட்ட ‘ஆதி அத்தி வரதர்’ என்ற பக்தி முழக்கம் அதே மண்ணில் மீண்டும் ஒலிக்க தொடங்கியிருக்கிறது. பக்தர்களுக்கு காட்சியளிக்க தொடங்கியுள்ள ஆதி அத்தி வரதரை யார்? எப்போது? எப்படி தரிசிக்கலாம்? என்பது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி, ஆதி அத்தி வரதரை தரிசிக்க வரும் உள்ளூர் மக்களுக்கு (காஞ்சீபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகள்) நுழைவு அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தினமும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை கோவிலுக்கு சென்று ஆதி அத்தி வரதரை தரிசனம் செய்யலாம். வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டணமில்லா தரிசனத்திற்கு செல்லலாம். அவர்களுக்கு நுழைவு சீட்டு அவசியம் இல்லை.

கட்டண தரிசனத்திற்கு ரூ.50 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கான நுழைவு சீட்டு கிழக்கு கோபுர பாதையில் வழங்கப்படும். கட்டணமில்லா தரிசனம் செய்ய வருபவர்களும் கிழக்கு கோபுரம் வழியாக கோவிலுக்குள் செல்லலாம். கருட சேவை நடக்கும் நாட்களில் மட்டும் உள்ளூர்வாசிகளுக்கு மாலை 5 மணி முதல் 8 மணி வரை தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

சஹஸ்ரநாமம் அர்ச்சனையுடன் கூடிய சிறப்பு தரிசனம் ரூ.500-க்கான நுழைவுச்சீட்டு இந்து அறநிலையத்துறை இணையதளம் மூலம் 4-ந்தேதி முதல் வினியோகிக்கப்படும். இந்த சிறப்பு தரிசனம் டிக்கெட்டை பெறுபவர்கள் மேற்கு கோபுரம் வழியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் தரிசனம் செய்யவரும் வி.ஐ.பிக்கள் மேற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டு, அதே வழியாக திரும்பி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு போக்குவரத்து  மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஒலி முகமதுபேட்டை, ஓரிக்கை, பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி போன்ற இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூர் களில் இருந்து வரும் பஸ்கள் அங்கே நிறுத்தப் படும். இங்கு வரும் பஸ்களில் இருந்து இறங்கும் பக்தர்கள் அந்த தற்காலிக பஸ் நிலையங்களில் தயார் நிலையில் இருக்கும் மினி பஸ்களில் ஏறி, கோவிலை அடையலாம். பஸ் பயண கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படும்.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆதி அத்தி வரதரை தரிசிப்பதற்கு வசதியாக கிழக்கு கோபுரம் பகுதியில் ரோப்-கார், 3 சக்கர சைக்கிள்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் 3 இடங்களில் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. டாக்டர்கள், செவிலியர்கள் அங்கு இருப்பார்கள்.பக்தர்கள் கோவிலுக்குள் நெரிசல் இன்றி செல்வதற்கு வசதியாக சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு மரக்கட்டைகளால் ஆன வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்வழியே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மரக்கட்டைகளால் ஆன வேலிக்குள் வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு அங்கே குடிநீர் வழங்குவதற்கும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

வரதராஜ பெருமாள் கோவிலில் ஆதி அத்தி வரதர் தரிசன நிகழ்வு குறித்த அறிவிப்புகள் 5 மொழிகளில் வெளியிடப்பட்டு இருக்கிறது. கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலி பந்தலில் மேல் பகுதிகளில் இதற்கான அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அறிவிப்புகள் எழுதப்பட்டுள்ளது.

Comment here