தமிழ்நாடு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 28-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபங்கள், விடுதிகள், தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்து விரதம் இருந்து வருகின்றனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் நாளான இன்று(சனிக்கிழமை) நடக்கிறது.  அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

மாலை 4.30 மணி அளவில் கோவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி, கிரிவீதி வலம் சென்று, 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் (அதாவது கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம்) நடைபெறுகிறது.

Comment here