அறுசுவை

மட்டன் கோலா கொத்துக்கறி உருண்டை செய்வது எப்படி ??

sendhamarainews.com

தேவையான பொருள்கள்:

மட்டன் கைமா – 150 கி

பட்டை – சிறிய துண்டு

லவங்கம் – 1

சோம்பு – 1 டீஸ்பூன்

கசகசா – 1 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 7

பூண்டு – 5 பல்

இஞ்சி – சிறிய துண்டு

பச்சை மிளகாய்    – 3

காய்ந்த மிளகாய்   – 3

தேங்காய் – 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்

பொட்டுக்கடலை மாவு – 150 மிலி

கறிவேப்பிலை – 2 கொத்து

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொறிக்க தேவையான அளவு

செய்முறை:

முதலில் மட்டன் கைமாவை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் 1 மேசைக் கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு போட்டு பொரிந்ததும், சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டைப் போட்டு லேசாக வதக்கவும். பிறகு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் கசகசா சேர்த்து பிரட்டவும். பிறகு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு தேங்காய் சேர்க்கவும். ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின், தண்ணீரில்லாமல் பிழிந்து வைத்த கைமாவைச் சேர்த்து நன்றாக வதக்கவும். மட்டன் சேர்த்தவுடன் தண்ணீர் விடும். அந்தத் தண்ணீர் வற்றும் வரை நன்றாக வதக்க வேண்டும். இந்த தண்ணீரிலேயே கைமா வெந்து விடும். வதக்கிய பொருட்களை ஆற வைத்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். இத்துடன் மஞ்சள் தூள், தேவையான உப்பு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து நன்றாகப் பிசைந்து  சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு மிதமான சூட்டில் பொறிக்க வேண்டும்.

குறிப்பு:

  •  கைமாவை தண்ணீர் இல்லாமல் வதக்கி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பொட்டுக்கடலை மாவைத் தனியாக அரைத்து சேர்க்க வேண்டும். இல்லாவிடில் உருண்டைகள் எண்ணையில் பிரிய வாய்ப்பு உள்ளது.
  •   எண்ணெய் சூடான பிறகு மிதமான சூட்டில் கோலாவைப் பொறிக்க வேண்டும். இல்லாவிடில் கோலா கருத்துப் போய் விடும்.
  • கோலாவைப் போட்ட உடன் திருப்பி விடக் கூடாது. கோலா உடைந்து விடும்.
  •  எண்ணெய் அளவிற்குத் தகுந்தார் போல் கோலாவைக் குறைந்த எண்ணிக்கையில் போட்டு பொறிக்க வேண்டும்.
  • கோலாவைப் போட்டவுடன் எண்ணெய் பொங்கி வரும். கோலா வெந்த உடன் நுரை தானாக அடங்கி விடும்.

Comment here