இந்தியா

மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிப்பு | அமித்ஷா-பட்னாவிஸ் ஆலோசனை

மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிப்பு | அமித்ஷா-பட்னாவிஸ் ஆலோசனை

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று டெல்லியில் பாரதீய ஜனதா தேசிய தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

40 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்புக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், மராட்டியத்தில் விரைவில் புதிய அரசு அமையும் என்று தெரிவித்தார். ஆனால் அதில் சிவசேனா இடம்பெறுமா என்பது பற்றி எதுவும் கூறவில்லை. மற்றபடி அமித்ஷாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை பற்றிய விவரங்களை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.

இதற்கிடையே, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி., சிவசேனா மந்திரி ராம்தாஸ் கதம் ஆகியோர் நேற்று மாலை திடீரென மும்பையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார்கள்.

இந்த சந்திப்பு குறித்து பின்னர் சஞ்சய் ராவத் நிருபர்களிடம் கூறுகையில், மாநிலத்தில் நிலவும் அரசியல் நிலவரம் பற்றி கவர்னருடன் பேசியதாகவும், புதிய அரசு அமைவதில் ஏற்பட்டு உள்ள குழப்பத்திற்கு சிவசேனா காரணம் அல்ல என்று அவரிடம் விளக்கியதாகவும் தெரிவித்தார்.

ஆட்சி அமைக்க இன்னும் கால அவகாசம் இருப்பதால் புதிய அரசை அமைக்க எந்த கட்சியும் உரிமை கோரலாம் என்று கவர்னர் தங்களிடம் தெரிவித்ததாகவும் சஞ்சய் ராவத் கூறினார்.

யாருக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறதோ அவர்களைத்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

தற்போதைய மராட்டிய சட்டசபையின் பதவிக்காலம் வருகிற 9-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்குள் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள இழுபறி நிலை முடிவுக்கு வராத பட்சத்தில், பாரதீய ஜனதா 105 எம்.எல்.ஏ.க்களுடன் தனிப்பெரும் கட்சியாக விளங்குவதால், ஆட்சி அமைக்க வருமாறு அந்த கட்சிக்குத்தான் கவர்னர் முதலில் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comment here